November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Breaking News: மியன்மாரின் ஆளுங்கட்சித் தலைவி ஆங் சான் சூ சி இராணுவத்தால் கைது!

மியன்மாரின் ஆளும் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் (என்எல்டி கட்சி) தலைவி ஆங் சான் சூ சி கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

சிவிலியன் அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் இடையே நிலவிய மோதல் போக்கின் தொடர்ச்சியாக இந்தக் கைது நடந்துள்ளது.

இதனையடுத்து மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடக்கலாம் என்ற அச்சம் வலுத்துள்ளது.

நவம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆட்சியமைப்பதற்குத் தேவையான நாடாளுமன்ற ஆசனங்களை சூ சியின் கட்சி பெற்றிருந்தது. எனினும் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக இராணுவம் கூறுகின்றது.

இன்று திங்கட்கிழமை கூடவிருந்த நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்குமாறு இராணுவம் கோரியிருந்தது.

இந்தப் பின்னணியில், சூ சி, ஜனாதிபதி வின் மியின்ட் மற்றும் ஏனைய தலைவர்கள் இன்று பொழுது புலர முன்னதாக கைது செய்யப்பட்டுள்ளதாக ஆளும் என்எல்டி கட்சியின் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

‘மக்களை பக்குவமாக, சட்டத்தின் படி’ நடந்துகொள்ளுமாறு கோரிய கட்சியின் பேச்சாளர் தானும் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தலைநகர் நேய்பிடாவ் மற்றும் முக்கிய நகர் யங்கோன் ஆகிய இடங்களில் வீதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டு தொலைபேசி, இணைய இணைப்புகள் யாவும் முடக்கப்பட்டுள்ளன.

தற்போது 75 வயதாகின்ற ஆங் சான் சூ சி, சுமார் 15 ஆண்டுகாலம் இராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் 2010 இல் விடுதலையானார்.

2015 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சூ சியின் கட்சி பெரு வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

எனினும், சூ சியின் பிள்ளைகள் வெளிநாட்டுப் பிரஜைகளாக உள்ளதால், மியன்மாரின் அரசியலமைப்புப் படி அவரால் ஜனாதிபதியாக வர முடியவில்லை. ஆனாலும், அந்நாட்டின் சிவிலியன் அரசாங்கத்தின் (சட்ட அந்தஸ்தற்ற) தலைவியாக சூ சி தான் பார்க்கப்பட்டார்.

வீட்டுக் காவலில் இருந்த காலத்தில் ஜனநாயக போராட்டத்தின் சின்னமாக சர்வதேச மட்டத்தில் புகழப்பட்ட ஆங் சான் சூ சி, ரொகிஞ்சா முஸ்லிம் மக்கள் மீதான மியன்மார் அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல்கொடுக்கத் தவறியதாக கடுமையான விமர்சனங்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.