November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதலுக்கான ஒத்திகையாக இருக்கலாம்’

(Photo:Reuters India/Twitter)

இந்திய தலைநகர் புதுடெல்லியில் இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் இடம்பெற்ற குறைந்த சக்தி கொண்ட குண்டுவெடிப்பு சம்பவம் பாரிய தாக்குதலுக்கான ஒத்திகையாக இருக்கலாம் என டெல்லி பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் ரொன் மல்காவிற்கான கடிதமொன்றும் சில தடயங்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இதன்மூலம் இஸ்ரேலுக்கு எச்சரிக்கையொன்றை தெரிவிப்பதற்கான ஈரானின் பெரும் சதியாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 12 மீற்றர் தொலைவில் காணப்பட்ட கடிதமொன்றில் ‘துரோகி’ என்ற வசனமும், கொல்லப்பட்ட முக்கிய இராணுவ அதிகாரி மற்றும் அணுவாயுத விஞ்ஞானியின் பெயர்களும் காணப்பட்டதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த மாதத்தில் டெல்லிக்கு விஜயம் மேற்கொண்ட ஈரானிய பிரஜைகளின் விபரங்களை சேகரிக்கும் முயற்சியில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை இந்த வெடிப்பு சம்பவம் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கும் எனவும் இஸ்ரேல், இந்தியா இடையேயான உறவு நிறுவப்பட்ட 29 ஆம் ஆண்டு தினத்திலேயே இந்த வெடிப்பு இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இப்போது இருப்பதைப் போன்று இந்தியா மற்றும் இஸ்ரேல் அதிகாரிகளிடையே எப்போதும் முழுமையான இணக்கம் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.