கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம், ஏற்றுமதி தடை விதித்துள்ளமை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது.
இதேநேரம், கொவிட் தடுப்பூசி தேசியவாதம் காரணமாக சர்வதேச ஒத்துழைப்பின் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடும் எனவும் கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து மீள்வது தொடர்பில் பெரும் சவாலான நிலைமை ஏற்படும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கவலை தெரிவித்துள்ளது.
அத்தோடு பல வர்த்தகங்கள் சர்வதேச விநியோகத்தினை அடிப்படையாகக் கொண்டு வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன எனவும் சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
அத்தோடு எங்கள் மக்களின் பாதுகாப்பே முன்னுரிமைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் நாங்கள் எதிர்கொண்டுள்ள சவால்களை கருத்தில் கொள்ளும்போது இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியதை தவிர வேறு எந்த தெரிவுகளும் இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த கட்டுப்பாடுகள் காரணமாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா உட்பட பல நாடுகளை பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த ஏற்றுமதி தடையால் அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் மருந்து வழங்கல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா கொள்வனவு செய்துள்ள அஸ்டிராஜெனேகா மருந்துகளில் பெரும்பாலானவை அவுஸ்திரேலியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டவை என்றாலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து 3.8 மில்லியன் டோஸ் மருந்துகளை அஸ்டிராஜெனேகா இறக்குமதி செய்வதற்கு திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.