18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்டிரா ஜெனேகா தடுப்பு மருந்தினை பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
சோதனைகளின் போது அஸ்டிரா ஜெனேகா 60 சதவீதம் பலனளிப்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ள ஐரோப்பிய மருத்துவ முகவர் அமைப்பு, இதனை அடிப்படையாக வைத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
18 முதல் 55 வயதுக்குட்பட்டவர்களை அடிப்படையாக வைத்து மருந்தினை சோதனை செய்யும் நடவடிக்கை இடம்பெற்றது என ஐரோப்பிய மருத்துவ முகவர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
முதியவர்கள் விடயத்தில் அஸ்டிரா ஜெனேகா எவ்வாறு செயற்படும் என்பதை கணிப்பதற்கான சோதனை முடிவுகள் இல்லை எனவும் ஐரோப்பிய மருத்துவ முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை அஸ்டிரா ஜெனேகா மீறுகின்றதா என்ற சர்ச்சை உருவாகியுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஸ்டிரா ஜெனேகா உடன்படிக்கையை மீறியது என குற்றம்சாட்டும் ஐரோப்பிய ஒன்றியம் அஸ்டிரா ஜெனேகாவுடனான உடன்படிக்கையை பகிரங்கப்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள தனது தொழிற்சாலைகளில் காணப்படும் பிரச்சினை காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தனது விநியோகத்தினை குறைக்கவேண்டியிருக்கும் என அஸ்டிரா ஜெனேகா தெரிவித்துள்ளது.