July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரையை நிறைவேற்ற கனடா நடவடிக்கை எடுக்கவேண்டும்’

இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பரிந்துரையின்பேரில் கனேடிய அரசு விரைவாகவும் விரிவாகவும் இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கனேடிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையை வரவேற்றுள்ள கனேடிய தமிழர் பேரவை, மிகமுக்கியமான இந்த அறிக்கை இலங்கை அரசின் தோல்விகளின் வழிவகைகளை பட்டியலிடுகின்றது எனவும் தெரிவித்துள்ளது

இலங்கையில் தற்போதைய மனித உரிமைகள் நிலவரம் மற்றும் 2009 இல் முடிவடைந்த போரின் போது ஏற்பட்ட மனிதகுலத்துக்கு விரோதமான குற்றங்களுக்குத் தீர்வு காண இலங்கை அரசு ஆற்றிய கடமைகள் ஆகியவற்றுடன் இவை தொடர்புடையவையாகும் எனவும் கனேடிய தமிழர் பேரவை வரவேற்றுள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகளை சர்வதேசமும், கனடாவும் எடுக்க வேண்டுமென கனடியத் தமிழர் பேரவை தொடர்ந்து உழைத்து வருகிறது. மேலும் குற்றவாளிகள் மீது ‘மாக்னிட்ஸ்கி’ சட்டத்தின் அடிப்படையில் தடைகளை ஏற்படுத்த வேண்டுமென கனேடிய அரசாங்கத்தை தொடர்ச்சியாக கோரியும் வருகிறது எனவும் கனேடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

கனேடிய தமிழர் பேரவை, இரண்டு முறை (பெப்ரவரி 17, 2020 மற்றும் நவம்பர் 10, 2020) அப்போதைய கனேடிய வெளியுறவு அமைச்சர் மாண்புமிகு பிரான்சுவா பிலிப் ஷாம்பெயினுக்கு இதேபோன்ற நடவடிக்கையை வலியுறுத்தி கடிதங்களை எழுதியிருக்கிறது.

ஏமாற்றமளிக்கும் விதமாக, கனேடிய அரசு இந்த வழிகளில் இன்னும் அர்த்தமுள்ள எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை எனவும் கனடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

உண்மையில், கனடாவின் செயலற்ற தன்மை இலங்கையைத் துணிச்சலாகவும் பொறுப்பற்றதாகவும் தைரியப்படுத்துகிறது. போர்க்குற்றங்களில் நம்பகத்தன்மையுடன் சம்பந்தப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிக்கு கனடாவுக்கான இலங்கைத் தூதுவர் நியமனத்தை பரிசீலிக்க கோருமளவுக்கு இலங்கை அரசு சென்றுள்ளது எனவும் கனேடிய தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.