November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவில் கள ஆய்வை தொடங்கியது உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழு

(File Photo)

முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹான் நகரில் கள ஆய்வுப்பணிகளை உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழுவினர் நேற்றையதினம் ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த வூஹான் நகரிலுள்ள மருத்துவமனை, ஆய்வு நிலையங்கள் மற்றும் கொரோனா தடுப்பு முகாம்களில் தனது ஆய்வை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் பரவியது என அமெரிக்கா, அவுஸ்திரேலிய உள்ளிட்ட பல நாடுகள் குற்றம் சாட்டிய நிலையில் விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்ய சீனா சென்றது.

இதனையடுத்து 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முடிந்த பின்னர், நிபுணர்கள் குழுவினர் கள விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவமனைக்கு சென்றதாக நிபுணர் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள், பணியாளர்களை சந்தித்து அவர்களுடைய பணிகள் குறித்து வெளிப்படையான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் உறுப்பினர் பீட்டர் டஸ்ஜாக் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலரும், கொரோனா தொற்றால் தனது தந்தையை பறிகொடுத்த ஜாங் ஹாய் என்பவரும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்களை சந்திப்பதற்கும் அவர்களுடைய விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதற்கும் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஆய்வுகளின் அறிக்கை முடிவுகள் வெளியான பிறகு தான் தெளிவான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் கொரோனா வைரஸை முற்றிலுமாக ஒழிப்பதற்கான வழி ஏற்படலாம் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.