
File photo : twitter/singapore police
2019 இல் நியுசிலாந்து மசூதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை போன்று தாக்குதல்களை முன்னெடுக்க திட்டம் தீட்டிய பதின்ம வயது இளைஞர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிறைஸ்சேர்ச் மசூதி படுகொலைகள் (மார்ச்) நினைவுதினத்தின் போது இவர் இரண்டு மசூதிகள் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிங்கப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஸ்யபா மசூதி மற்றும் யூசுவ் இசாக் மசூதிகள் மீதே இவ்வாறு கத்திக்குத்து தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த குறித்த இளைஞர், புரொட்டஸ்தாந்து பிரிவை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேறு எவரினதும் உதவியின்றி தன்னை தானே தீவிரவாதமயப்படுத்தியுள்ளார், என தெரிவித்துள்ள சிங்கப்பூர் அதிகாரிகள் இஸ்லாம் மீதான வெறுப்பும் வன்முறை மீதான ஈடுபாடும் இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.
இவர், நியுசிலாந்தில் தாக்குதலை மேற்கொண்டவரின் நேரடி ஒலிபரப்பை பார்வையிட்டுள்ள நிலையில் அதனை அடிப்படையாக கொண்டு தமது தாக்குதல்களை திட்டமிட்டிருந்ததாக அசிங்கப்பூர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த இளைஞர் டிசம்பரில் கைதாகியதாகவும் தீவிரவலதுசாரி கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டமைக்காக சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட முதல் நபர் இவர் எனவும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.