November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பு மருந்து விநியோகத்தில் தாமதம்: ஐரோப்பிய ஒன்றியம் – அஸ்ட்ராஜெனேகா இழுபறி தொடர்கின்றது!

அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் உறுதியளித்தவாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மேலும் கொரோனா தடுப்பு மருந்துகளை விநியோகிக்க வேண்டும் என ஒன்றியத்தின் சுகாதார ஆணையாளர் ஸ்டெல்லா கிரியாகிடிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அஸ்ட்ராஜெனேகா முதல் காலாண்டில் விநியோகிப்பதற்கு உறுதியளித்திருந்த தடுப்பு மருந்து தொகையில் குறிப்பிட்ட ஒரு அளவையே வழங்க முடியும் என்று கூறியிருப்பதால் ஐரோப்பிய ஒன்றியம் விசனம் அடைந்திருக்கின்றது.

ஐரோப்பிய தொழிற்சாலைகளில் மருந்து தயாரிப்பில் நிலவுகின்ற சில தாமதங்களே அதற்கு காரணம் என அஸ்ட்ராஜெனேகா கூறுகின்றது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் தாமதமாக தொடங்குகின்றமை தொடர்பில் ஒன்றியத்தின் மீது விமர்சனங்கள் உள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்துக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையில், மருந்து தயாரிப்பு தகவல்களை ரகசியமாக வைத்திருப்பதற்கான விதி ஒன்று சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தது. எனினும், அந்தத் தகவல்களை வெளியிடுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இப்போது கோரியுள்ளது.

2021 ஜனவரி-மார்ச் காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விநியோகிக்க உத்தேசித்திருந்த தடுப்பு மருந்து தொகையில் 40 வீதத்திற்கும் குறைவான அளவே விநியோகிக்கப்படும் என்று கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன.

“பிரிட்டனில் இயங்கும் அஸ்ட்ராஜெனேகா தொழிற்சாலைகள் உற்பத்தியில் சிக்கலை எதிர்கொள்ளாதுள்ள நிலையில், அவையும் எமது உடன்படிக்கையின் அங்கம் என்பதால் அங்கிருந்து மருந்து விநியோகத்தை மேற்கொள்ள முடியும்” என்று ஐரோப்பிய ஒன்றியம் வாதிடுகின்றது.

“ஒப்பந்தப்படி, அஸ்ட்ராஜெனேகா அதன் உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்று எமது 27 நாடுகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதாரத்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இத்தாலிய பத்திரிகை ஒன்றுக்கு கடந்த செவ்வாயன்று பேசியிருந்த அஸ்ட்ராஜெனேகாவின் தலைமையதிகாரி, “குறித்த கால அளவுக்குள் மருந்துகளை விநியோகிப்பதை விட, அதற்காக ‘முடிந்தவரை முயற்சிக்க வேண்டும்’ என்பதே ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

ஆனால், மருந்து விநியோகத்தில் ஏற்படும் தாமதம் தொடர்பில் அஸ்ட்ராஜெனேகாவுக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக இத்தாலி உள்ளிட்ட நாடுகள் எச்சரித்துள்ளன.

நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவிலும் தீர்வு எட்டப்படாத நிலையிலேயே, உறுதியளிக்கப்பட்டவாறு மருந்து விநியோகத்தை நிறைவேற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளுக்கு தடுப்பு மருந்து விரைவில் கிடைப்பதற்காக அஸ்ட்ராஜெனேகாவுடன் தொடர்ந்தும் பேச்சு நடத்தப்படும் என்று ஒன்றியத்தின் சுகாதாரத்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

“அடுத்துவரும் மாதங்களில் தடுப்பு மருந்து விநியோகிக்கப்படுவதற்கான வழிமுறை ஒன்றை உருவாக்குவதற்காக தொடர்ந்தும் நெருக்கமாக பணியாற்றிவருவதாக அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.