உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 100 மில்லியனை (10 கோடி) கடந்துள்ளது.
சீனாவில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நாள் முதல் இதுவரையில் உலகம் பூராகவும் 10 கோடியே 9 இலட்சத்து 425 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக உலகளாவிய புள்ளி விபரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது உலக சனத்தொகையில் 1.3 வீதமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை உலகில் 2.1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
எவ்வாறாயினும் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரில் 7 கோடியே 79 இலட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து சராசரியாக ஒவ்வொரு 7.7 விநாடிகளுக்கு ஒருவர் என்ற ரீதியில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
இதன்படி நாளாந்தம் உலகளாவிய ரீதியில் சுமார் 668,250 வரையான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகுவதாக புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உலகளாவிய கொரோனா தொற்று பரவலில் முதல் 11 மாதங்களில் 50 மில்லியன் தொற்றாளர்கள் பதிவாகியிருந்த நிலையில் அதனை தொடர்ந்து 3 மாதங்களில் அடுத்த 50 மில்லியன் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளன.
இது தொற்று மிகவும் வேகமாக பரவுகின்றது என்பதனையே எடுத்துக்காட்டுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சுமார் 56 நாடுகளில் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதில் தனிநபர்களுக்கு தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்கும் பணியில் இஸ்ரேல் முன்னணியில் உள்ளது. அதன் மக்கள்தொகையில் குறைந்தது 29 வீதமானவர்களுக்கு முதலாவது தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.