January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க தேர்தல்களில் தலையிடுவது குறித்து ரஷ்யாவுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை

அமெரிக்கத் தேர்தல்களில் தலையிடுவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் தொலைபேசி மூலமாக ஜோ பைடன் பேசி வருகிறார். அந்த வகையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் ஜோ பைடன் உரையாடியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘எங்களுக்கோ அல்லது எங்கள் நட்பு நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக செயல்படும் என்பதை பைடன் தெளிவுபடுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்யா மீது உலக நாடுகள் தொடர்ந்து முன்வைத்து வரும் இணைய வழி தாக்குதல் குறித்தும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினருக்கு எதிரான செயல்பாடுகள் குறித்தும் உரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ரஷ்யாவில் நிலவி வரும் எதிர்க்கட்சித் தலைவர் நாவல்னிக்கு எதிரான போராட்டங்கள் குறித்தும், இரு நாடுகளுக்கிடையேயான அணுசக்தி ஒப்பந்தம் குறித்தும் பேசியதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதன் மூலம் இரு நாடுகளின் நலன்களையும் உறுதிசெய்வது குறித்தும், உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதில் இரு நாடுகளுக்கும் உள்ள சிறப்பு பொறுப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.