July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அச்சுறுத்தலால் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் குறித்து அச்ச நிலை

ஐரோப்பிய ஒன்றியம் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதை தொடர்ந்து மருந்து விநியோகம் குறித்த அச்சம் உருவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் முன்னர் வாக்குறுதியளித்தபடி மருந்துகளை வழங்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஏற்றுமதியை தடை செய்யப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடுகள் மூன்றாம் உலக நாடுகளிற்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் அது குறித்த முன்னறிவித்தலை வெளியிடவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார ஆணையாளர் ஸ்டெல்லா கிரியாகிடிஸ் தெரிவித்துள்ளார்.

தனது நாட்டின் மக்களை பாதுகாப்பதற்காக 27 உறுப்பு நாடுகளும் கடும் நடவடிக்கையை எடுக்க தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் முதலாவது கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை உற்பத்தி செய்வதற்கு ஐரோப்பா மில்லியன் கணக்கில் டொலர்களை செலவிட்டது என தெரிவித்துள்ள ஐரோப்பிய ஆணையகத்தின் தலைவர் உருசுலா வொன்டெர் லெயென், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த பிரச்சினை பிரிட்டனிற்கான கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்தினை பாதிக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.