July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலியாவின் படையெடுப்பு தினம் கொண்டாட்டத்திற்குரியதா?; கேள்வி எழுப்பியுள்ள பழங்குடியினர்

File Photo : tweeter/@benjamingrundy

அவுஸ்திரேலியாவின் படையெடுப்பு தினம் இன்று கொண்டாடப்பட்ட நிலையில், இது கொண்டாட்டத்திற்குரியதா? என பழங்குடியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும் மீறி பெருமளவானவர்கள் அவுஸ்திரேலியாவின் படையெடுப்பு தின பேரணிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளனர்.

சிட்னியில் சுமார் 5000 பேர்  சுதந்திர தின பேரணியில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மஸ்கிரேவ் பூங்காவில் கொடி ஏற்றப்பட்டதன் பின்பு சுமார் 10,000 பேர் குயின்ஸ் பகுதியிலிருந்து பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் பழங்குடி மக்கள் தவறாக நடத்தப்படுவதை  எதிர்த்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் சிறுவர்கள், பெரியவர்கள், பழங்குடியினர் மற்றும் பழங்குடி அல்லாதவர்கள் என அனைவரும் பதாகைகள் மற்றும் மாபெரும் பழங்குடியினரின் கொடியுடன் ஒன்றாக அணிவகுத்துச் சென்றுள்ளனர்.

இந்த பேரணியில் கலந்துகொண்ட கிறீன்செனெட்டர் லிடியா தோர்ப், இந்த மண்ணின் முதல் குடியினர் மீது யுத்த பிரகடனம் செய்யப்பட்டது. அது இன்றுவரை நீடிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

1788 இல் ஆரம்பமான யுத்தம் இன்னமும் முடிவடையவில்லை. 250 ஆண்டுகளாக தொடர்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றும் எங்கள் தலைகள், கழுத்துக்களின் மீது துப்பாக்கிகள் உள்ளன. எங்கள் குழந்தைகள் களவாடப்படுகின்றனர், சிறையில் வீசப்படுகின்றனர் என தெரிவித்துள்ள அவர், இது கொண்டாட்டத்திற்குரியதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இதே போன்று மெல்பேர்னிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

233 வருடங்களிற்கு முன்னர் சிட்னி துறைமுகம் தற்போதுள்ள பகுதியில் முதன்முதலில் போர்ட் ஜக்சனின் முதலாவது கப்பல் படைப்பிரிவு தரையிறங்கி பிரிட்டிஸ் கொடியை ஏற்றிய நாளே அவுஸ்திரேலிய தினம் என அழைக்கப்படுகின்றது.

சுதந்திர தின பேரணியில் கலந்துகொண்டவர்கள் பொலிஸாரின் உத்தரவினை கடைப்பிடித்த அதேவேளை, சிறிய மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், ஐந்துபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.