November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைக்கு எதிராக நெதர்லாந்தில் கடும் வன்முறைகள்

நெதர்லாந்தில் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் வன்முறையுடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஊரடங்கிற்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டவர்கள் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதுடன், கலகம் அடக்கும் காவல்துறையினர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

எயின்டோவன் நகரிலேயே மோசமான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. பட்டாசுகளை எறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்பொருள் அங்காடிகளை சூறையாடியதுடன், வர்த்தக நிலையங்களின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து நொருக்கியுள்ளனர்.

கலகம் அடக்கும் பொலிஸார் மீது கோல்ப் பந்துகளையும் பட்டாசுகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீசி எறிந்துள்ளனர்.

எரியும் வாகனங்களை பயன்படுத்தி வீதி தடைகளை உருவாக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள், மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளனர்.

ஆம்ஸ்டெர்டாமிலும் ஏனைய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

வன்முறைகளில் ஈடுபட்ட 200 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உர்க் என்ற கிராமத்தில் கொரோனா சோதனை நிலையமொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக இரவு நேர ஊரடங்கு உட்பட கடுமையான நடவடிக்கைகளை நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளதை தொடர்ந்தே இந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.

இது ஆர்ப்பாட்டமில்லை இது வன்முறை. நாங்கள் வன்முறையாகவே கருதப்போகின்றோம் என பிரதமர் மார்க் டுட்டே தெரிவித்துள்ளார்.