
கொரோனா வைரஸினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து உலகின் வறிய மக்கள் மீள்வதற்கு ஆகக்குறைந்தது பத்துவருடங்களாவது ஆகும் என சர்வதேச தொண்டு நிறுவனமான ஒக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான இடைவெளி கொரோனா வைரசினை போல கொடியது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என அந்நிறுனத்தின் நிறைவேற்று அதிகாரி கபிரியலா பச்சர் தெரிவித்துள்ளார்.
சமத்துவமின்மையை குறைப்பதற்கு அரசாங்கங்கள் துரிதமாக செயற்படவேண்டும் எனவும் உறுதியான தெளிவான காலவரையறைகளை வகுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொருளாதார மீட்பு மற்றும் மீள்எழுச்சி நடவடிக்கைகளின் மையமாக சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டம் காணப்படவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
79 நாடுகளை சேர்ந்த 295 பொருளியலாளர்கள் மத்தியில் ஒக்ஸ்பாம் மேற்கொண்ட ஆய்வில் 87வீதமானவர்கள் தங்கள் நாடுகளில் சமத்துவமின்மை மோசமாக அதிகரிக்கப்போகின்றது என தெரிவித்துள்ள நிலையில், ஐம்பது வீதமானவர்கள் பால்நிலை சமத்துவம் மற்றும் இனங்களிற்கு இடையிலான சமத்துவமின்மை அதிகரிக்கப்போகின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஆய்வில் கலந்து கொண்ட மூன்றில் இரண்டு வீதமானவர்கள் இந்நிலையிலிருந்து மீண்டுவர அரசாங்கங்களிடம் உரிய திட்டங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.