November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஷ்யாவில் போராட்டக்காரர்கள், பத்திரிகையாளர்கள் கைதுகளுக்கு அமெரிக்கா கண்டனம்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சே நவால்னியை விடுதலை செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள் மற்றும்  போராட்டக்காரர்கள் கைதுக்கு  அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் குறித்தும் அவரது ஆட்சி குறித்தும் கடுமையாக விமர்சித்து வந்தவர் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சே நவால்னி.

இவரது உணவில் விஷம் வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்து செல்லப்பட்ட நாவல்னி அண்மையில் ரஷ்யா திரும்பினார். பழைய வழக்கு ஒன்றில் பிணை பெற்றிருந்த நாவால்னி, மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட நவால்னியை விடுவிக்கக் கோரி ரஷ்யா தலைநகர் மாஸ்கோ,செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்  உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் போது பொலிஸார் தடியடி நடத்திய நிலையில், போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மாஸ்கோவில் நடைபெற்ற போராட்டத்தில் பொலிஸார் சிலரும் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்கா வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், ‘கைது செய்யப்பட்டுள்ள நாவல்னியை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்.

தங்களது சர்வதேச உரிமைகளை பயன்படுத்திய போராட்டக்காரர்களையும், பத்திரிகையாளர்களையும் விடுவிக்க வேண்டும்’ என்றார்.

மேலும், ரஷ்யாவிலோ அல்லது எங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளானாலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அமெரிக்கா துணை நிற்கும்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னியை விடுதலை செய்யக் கோரி நடந்த போராட்டம்  உலக நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.