இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணை ஒன்றை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு சர்வதேசத்தையும் ஐநா மனித உரிமைகள் பேரவையயும் திசைதிருப்பும் முயற்சி என உலகளாவிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் இலங்கை மீது புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் தெற்காசிய விவகாரங்களுக்கான இயக்குநர் மீனாக்ஷி கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் முழு அறிக்கை:
இலங்கையின் மோசமான மனித உரிமை வரலாறு ஜெனீவாவில் உள்ள ஜநா மனித உரிமைகள் பேரவையின் தீவிர விசாரணைக்கு உள்ளாகியுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் இன்னொரு உள்ளக விசாரணையை அறிவித்துள்ளது. அவசரமாக தேவைப்படுகின்ற சர்வதேச நடவடிக்கையை தவிர்க்கும் இந்த நேர்மையற்ற முயற்சியால் வெளிநாடுகளின் அரசாங்கங்கள் திசைதிருப்பப்பட்டு விடக்கூடாது.
இலங்கையில் பல தசாங்களாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தின்போது, பெரும்பாலும் மனித உரிமை விவகாரம் தொடர்பில் சர்வதேச அழுத்தம் எழுவதை தவிர்ப்பதற்காக, குறைந்த பட்சம் ஒரு டஜன் உள்ளக விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், அவை எவற்றாலும் நீதிமன்ற வழக்குகளைத் தொடரவோ, காணாமல்போன உறவுகளை கண்டுபிடிப்பதற்கு அவர்களின் குடும்பங்களுக்கு உதவவோ முடியவில்லை.
அந்த ஆணைக்குழுக்களால் கண்டறியப்பட்ட விடயங்கள் பெரும்பாலும் வெளியிடப்படாமலும், பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாமலும் தான் இருந்துள்ளன.
இலங்கையின் நீதிவிசாரணை நடைமுறைகளில் உள்ள அடிப்படை கட்டமைப்பு ரீதியான பிரச்சனைகளை சர்வதேச கண்காணிப்பாளர்களும் ஐநா நிபுணர்களும் ஐநாவின் மனித உரிமைகள் ஆணையரும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
மனித உரிமைகள் பேரவை பல ஆண்டுகளாக இலங்கையுடன் பணியாற்றிவருகின்றது. 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்த காலத்தில் நடந்த கொடூரங்கள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கின. அங்கு போர்க்குற்றங்களும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களும் நடந்துள்ளமைக்கான ஆதாரங்களை பல ஐநா அறிக்கைகள் கண்டறிந்துள்ளன.
முந்தைய விசாரணை ஒன்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கையை கோரும் தீர்மானம் ஒன்று 2012 இல் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அது நிறைவேறாத பட்சத்தில், இந்த சர்வதேச பிரச்சனையை தீர்ப்பதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்பதை பேரவை ஏற்றுக்கொண்டது.
உண்மை, நீதி, இழப்பீடு, மீண்டும் நடக்காதவாறான உத்தரவாதம் போன்ற உறுதிமொழிகளுடன் 2015 இல் மனித உரிமைகள் பேரவை கொண்டுவந்த ‘இணக்க ரீதியான’ தீர்மானத்தில் இலங்கை இணைந்து கொண்டது. பொறுப்புக்கூறல் பொறிமுறையுடன் சர்வதேச நீதிபதிகள், வழக்குரைஞர்கள், விசாரணையாளர்கள் மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களையும் உள்ளடக்கிய விதத்தில் கொண்டுவரப்பட்ட அந்தத் தீர்மானம் தொடர்பில் மெதுவாகவேனும் ஒரு முன்னேற்றம் காணப்பட்டது. அதுவே, பின்னர் பேரவை (இலங்கைக்கான) அவகாசத்தை நீட்டிப்பதற்கும் தூண்டுதலாக அமைந்தது.
ஆனால், 2019 இல் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அந்த முன்னேற்றம் பின்னடைவை சந்தித்தது.
கடந்த பெப்ரவரியில், மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றப்போவதில்லை என அரசாங்கம் தெரிவித்தது. இதில் ஆச்சரியம் இல்லை. 2005-2015 காலப்பகுதியில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ராஜபக்ஷ பல்வேறு மோசமான கொடுமைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி என்ற ரீதியில், அந்தக் குற்றங்களை புரிந்தவர்கள் என குற்றம்சாட்டப்படுவோரை அவர் உயர் பதவிகளில் நியமித்துள்ளார், பொதுமக்களை படுகொலை செய்த குற்றத்திற்காக அரிதாக சிறையில் அடைக்கப்பட்டவர்களில் ஒருவருக்குக் கூட மன்னிப்பளித்திருக்கிறார்.
முந்தைய குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், (சிவில்) செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொலிஸ் விசாரணையாளர்கள் கூட மௌனிக்கப்பட்டு இலங்கையை மீண்டும் அச்சம் ஆட்கொண்டுள்ளது. பலவீனமான நிலையில் உள்ள சிறுபான்மை மக்களை ராஜபக்ஷ அரசாங்கம் துன்புறுத்தியுள்ளது. போரில் பாதிக்கப்பட்ட தமிழ் பொதுமக்களின் நினைவிடம் ஒன்றும் இம்மாதம் இடித்தழிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கையூட்டும் சமிக்ஞைகள் வெளிப்படையாகவே தெரிகின்றன. (இலங்கையை) தொடர்ச்சியாக கண்காணிப்பதையும், எதிர்காலத்தில் வழக்குகளைத் தொடர்வதற்கான ஆதாரங்களை சேகரித்து, ஆராய்ந்து, பாதுகாப்பதையும் உறுதிசெய்யும் விதத்தில் மனித உரிமைகள் பேரவை புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவது மிகவும் அவசியமாகும்.
இலங்கை அரசாங்கத்தின் போலியான உறுதிமொழிகள் அல்லது தற்போதைய விசனத்தைக் கண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் திசைதிரும்பி விடக்கூடாது.
‘20 ஆவது திருத்தம்’ தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் விசனம்!
‘ஈழத் தமிழர் விவகாரத்தை’ எப்படி கையாளப் போகின்றது பைடனின் அமெரிக்கா?