ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சே நவல்னி கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரஷ்ய எதிர்கட்சி தலைவரின் மனைவி யூலியா நவல்னியாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொஸ்கோவின் மத்திய பகுதியில் உள்ள புகையிரத நிலையத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர் அழைத்துச்செல்லப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
அதிகாரிகளின் கடும் நடவடிக்கைகளையும் மீறி ரஷ்யாவின் பல நகரங்களில் கடும் குளிரின் மத்தியில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 1338 பேர் கைது செய்யப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் தூரகிழக்கில் ஆரம்பமான ஆர்ப்பாட்டங்கள் பின்னர் வடக்கிலும் இடம்பெற்றுள்ளன.
90 நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்த எதிர்கட்சி தலைவரின் ஆதரவாளர்கள், பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதை காண்பிக்கும் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
மொஸ்கோவின் புஸ்கின் சதுக்கத்திலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
புட்டின் திருடன் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிடுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.