உலக சுகாதார ஸ்தாபனம் தனது “கொவக்ஸ்” திட்டத்திற்கு பயன்படுத்துவதற்காக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கு பைசர்- பயோன்டெக் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
அதற்கமைய பைசர்- பயோன்டெக் நிறுவனங்கள் குறைந்தளவிலான கொரோனா தடுப்பு மருந்துகளையே வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவக்ஸ் திட்டத்தின் கீழ் வரும் உலக நாடுகளின் மருத்துவ சுகாதார பணியாளர்களுக்கே பைசர் நிறுவனம் தனது மருந்துகளை வழங்கவுள்ளது.
இதேவேளை பைசர்- பயோன்டெக் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தை சேர்ந்த அதிகாரிகள் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.
எனினும், பைசர் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதை உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரியொருவர் உறுதி செய்துள்ளார்.
செல்வந்த நாடுகளுக்கு பல மில்லியன் டோஸ்களை வழங்கியுள்ள பைசர் நிறுவனம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவக்ஸ் திட்டத்திற்கும் விரைவில் மருந்துகளை வழங்கும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
நடுத்தர மற்றும் வறிய நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்குவதற்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் திட்டமே கொவக்ஸ் என அழைக்கப்படுகின்றது.
உலக அளவில் தடுப்பு மருந்துகள் நியாயமாகவும் சிறந்த முறையிலும் விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்த கொவக்ஸ் திட்டம் வகைசெய்கின்றமை குறிப்பிடத்தக்கது.