File Photo : Wikipedia/Google
அவுஸ்திரேலியா நாட்டிலிருந்து கூகுள் தேடல் பொறியை நீக்கிக் கொள்ள உள்ளதாக அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூகுள், முகநூல் உட்பட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வழங்கும் செய்திகள் உட்பட உள்ளடக்கங்களிற்காக ஊடக நிறுவனங்களுக்கு ரோயல்டி (பதிப்புரிமை பெற்ற படைப்புகளின் பயன்பாட்டிற்காக சட்டப்பூர்வமாக செலுத்தும் கட்டணம்) செலுத்தவேண்டும் என அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே கூகுள் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத சட்டமொன்றை அவுஸ்திரேலியா அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் இந்த புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்த முடியாதவை என கூகுள் அவுஸ்திரேலியாவின் முகாமைத்துவ இயக்குநர் மெல்சில்வா தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா இந்த சட்டத்தினை நிறைவேற்றினால் அவுஸ்திரேலியாவில் கூகுள் தேடும் பொறியை நிறுத்தவேண்டிய நிலையேற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கூகுள் மிரட்டுகின்றது என தெரிவித்துள்ள செனெட்டர் ரெக்ஸ் பட்ரிக்ஸ், சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக அந்த நிறுவனம் அவுஸ்திரேலியாவை வலிந்து மோதலிற்கு இழுக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவை உலக நாடுகள் பின்பற்றும் என தெரிவித்துள்ள அவர் உலகின் அத்தனை நாடுகளிலும் இருந்து விலகிக்கொள்ளப்போகின்றீர்களா? என கூகுள் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் இவ் அச்சுறுத்தல்களிற்கு அவுஸ்திரேலியா பணியாது எனவும் பிரதமர் ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இந்த வருடத்துக்குள் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற தனது அரசாங்கம் உறுதியாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கூகுள் சிறிய சந்தை போட்டி கூட இல்லாத அத்தியாவசிய பயன்பாடாக அவுஸ்திரேலியாவில் காணப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
செய்திகளைவாசிக்க விரும்பும் மக்கள் மூலம் கூகுள் தனது வாடிக்கையாளர்களை பெறுகின்றது என தெரிவிக்கும் அரசாங்கம் ஊடக நிறுவனங்களுக்கு அவற்றின் செய்திகளுக்காக கூகுள் கட்டணம் செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.