July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற முன்னர் பைடனுக்கு ட்ரம்ப் எழுதிய கடிதம்!

டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் மிகுந்த தாராள மனப்பான்மை உடனான கடிதமொன்றை எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளார் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் மீதான மரியாதை காரணமாக அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை உடனடியாக தெரிவிக்கப் போவதில்லை என பைடன் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் பதவி விலகும் ஜனாதிபதி புதிய ஜனாதிபதிக்கு குறிப்பொன்றை விட்டுச்செல்வது நீண்ட கால பாரம்பரியமாக இருந்து வருகின்றது.

அமெரிக்காவின் 40 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்ற ரொனால்ட் ரேகனின் காலத்தில் இது ஆம்பித்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையிலேயே டிரம்ப் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு இக் கடிதத்தை எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் டிரம்ப் நாட்டின் வெற்றிக்காக பிரார்த்தித்துள்ளார் எனவும் புதிய அரசாங்கம் நாட்டின் மீதான கவனம் செலுத்த வேணடும் என வேண்டுகோளை விடுத்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறும் முன்பு மேற்கொண்ட பல நடவடிக்கைகளில் இந்த கடிதமும் ஒன்று.

டிரம்ப் குறித்த கடிதத்தை தனது நிர்வாக உறுப்பினரிடம் கூட காண்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோன்று பராக் ஒபாமா 2017 இல் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய போது  டிரம்பிற்கு சிறுகுறிப்பொன்றை எழுதிவைத்துவிட்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த குறிப்பை அல்லது கடிதத்தை பகிரங்கப்படுத்தக் கூடாது என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டாலும் கூட இறுதியில் ஊடகங்களில் இக் கடிதம் வெளிப்படுத்தப்படுகின்றமை வழமையாக உள்ளது.