
அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட ஜோ பைடன், 15 நிறைவேற்றுக் உத்தரவுகளில் கையொப்பமிட்டுள்ளார்.
கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி, இன சமத்துவம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவற்றை கையாள்வதற்கு முன்னுரிமையளிக்கப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்த வகையில், பொது மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பேணுவதைக் கட்டாயப்படுத்தி முதலாவது நிறைவேற்று உத்தரவில் கையொப்பமிட்டுள்ளதோடு, அமெரிக்கர்கள் முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துகொள்வதற்கான தீர்மானத்திலும் பைடன் கையொப்பமிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு சபையின் கீழ் கொவிட்-19 கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்புக் குழுவொன்றை அமைப்பதற்கான நிறைவேற்று உத்தரவிலும் அவர் நேற்று கையொப்பமிட்டுள்ளார்.
பலவந்தமான வெளியேற்றத்தைத் தடுப்பதற்கான தடையை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர் கடன் கொடுப்பனவுகளை திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை 2021 செப்டம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் அமெரிக்கா வெளியேறிய பாரிஸ் உடன்படிக்கையில் 30 நாட்களுக்குள் இணைந்துகொள்வதற்கான உத்தரவிலும் பைடன் கையொப்பமிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இன சமத்துவத்தை நிலைநாட்டுவதாக உறுதியளித்திருந்த பைடன், கூட்டாட்சி கொள்கை வகுப்பில் சமத்துவத்தை உட்பொதிப்பதற்கான தீர்மானத்திலும் கையொப்பமிட்டுள்ளார்.
அமெரிக்க மக்கள் கணக்கெடுப்பில் இருந்து ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை நீக்கும் உத்தரவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளாக புலம்பெயர்ந்தவர்களுக்கு ‘சட்டபூர்வ குடியேறிகள் அந்தஸ்து’ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை நீக்கும் உத்தரவிலும் பைடன் கையொப்பமிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார சலுகைகள் குறித்த சில உத்தரவுகளில் இன்றும் நாளையும் பைடன் கையொப்பமிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.