அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
அமெரிக்க காங்கிரஸ் கட்டடத்தின் மேற்கு முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பதவியேற்பு வைபவத்தில், ஜோ பைடன் உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் ஜோன் ரொபர்ஸ் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில், தேர்தல் கல்லூரியில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பைடன் 306 வாக்குகளையும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 232 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர். இதனடிப்படையில் பைடன் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான பைடன், முன்னதாக 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் 47 ஆது துணை ஜனாதிபதியாகவும், 1973 முதல் 2009 வரை டெலவெயர் மாநிலத்தின் சார்பாக அமெரிக்க மேலவை உறுப்பினராகவும் பதவியில் வகித்துள்ளார்.
இந்த பதவியேற்பு நிகழ்வில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான பராக் ஒபாமா, பில் கிலின்டன் மற்றும் ஜோர்ஜ் புஷ் ஆகியோரும் பதவிக் காலம் முடிவடையும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸும் கலந்துகொண்டுள்ளனர்.
ஜனவரி 6 ஆம் திகதி வாஷிங்டனில் நடைபெற்ற கலவரத்தைத் தொடர்ந்து இப்பதவியேற்பு நிகழ்வு நடைபெறுவதால், 25 ஆயிரம் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்க தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள டொனால்ட் ட்ரம்ப் இந்தப் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி, இன சமத்துவம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவற்றை கையாள்வதற்கு தமது பதவிக் காலத்தில் முன்னுரிமையளிக்கப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.