அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள்ளார்.
நான்கு வருட பதவிக் காலத்தை நிறைவுசெய்துள்ள ட்ரம்ப், புளோரிடாவில் உள்ள அவரது மார்-அ-லாகோ உல்லாச விடுதிக்குப் புறப்பட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் போது, ‘நம்பமுடியாத நான்கு வருடங்களைக் கடத்தியுள்ளதாகவும், அமெரிக்கர்களின் ஜனாதிபதியாகச் செயற்பட்டமை தனக்கு மிகப் பெரும் கௌரவமாகும்’ என்று தெரிவித்துள்ளார்.
அத்தோடு, புதிய நிர்வாகத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள ட்ரம்ப், ‘நாம் ஏதோவொரு வடிவத்தில் மீண்டும் வருவோம்’ என்றும் தெரிவித்து, விடைபெற்றுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் 1869 ஆம் ஆண்டின் பின்னர் அடுத்த ஜனாதிபதியாகப் பதவியேற்பவரின் பதவியேற்பு நிகழ்வைப் புறக்கணித்துச் செல்லும் முதலாவது நபர் ட்ரம்ப் என்பதும் குறிப்பிடத்தக்கது.