ஆரம்பக்கட்டத்திலேயே கொரோனா வைரஸ் பரவலை சீனாவும், உலக சுகாதார ஸ்தாபனமும் உரிய வேகத்தில் செயற்பட்டு அதனை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச நிபுணர் குழு குற்றம்சாட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பில் ஆராய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் நியமித்திருந்த நிபுணர் குழுவே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சீனா உள்ளூர் சுகாதார நடவடிக்கைகளை மேலும் வலுவான விதத்தில் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும் என நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
மேலும் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவுவதற்கான ஆதாரங்களை தீவிரமாக எடுத்திருக்கவேண்டும் எனவும் பல நாடுகள் இந்த அறிகுறியை புறக்கணித்தன எனவும் நிபுணர்கள் குழு குறிப்பிட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் தனது முதலாவது அவசரகூட்டத்தை உலக சுகாதார ஸ்தாபனம் நடத்தியிருந்தது. எனினும் சர்வதேச அவசர நிலைமையை அறிவிக்காமல் ஒரு வாரம் கழித்துதான் அறிவித்தது என நிபுணர் குழு சுட்டிக்காட்டியது.
அதற்குள் பல நாடுகளிலும் கொரோனாத்தொற்று பரவியதுடன் உலகளாவிய நோய் தொற்று எச்சரிக்கை அமைப்பு பலவீனமானதாக காணப்படுகின்றது எனவும் நிபுணர்கள் குழு கவலை வெளியிட்டுள்ளது.