July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சீனாவுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்’

சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் அணுகுமுறையில் மாற்றங்கள் கொண்டுவருவதன் ஊடாக கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று ஜோ பைடனால் அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அவ்ரில் ஹெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

சீனா குறித்து கவனம் செலுத்துவதற்காக எதிர்காலத்தில் அதிக வளங்களை அமெரிக்கா பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா இன்று எதிர்கொள்கின்ற சவால்களின் அடிப்படையில், சீனாவுக்கு எதிரான எந்தவொரு கடுமையான நிலைப்பாட்டையும் தான் ஆதரிப்பதாகவும் தேசிய புலனாய்வு இயக்குநராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அவ்ரில் ஹெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் குறித்த நற்பெயர் பாதிக்கப்பட்டு, மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதாகவும், இழந்த கௌரவத்தையும் நம்பிக்கையையும் மீண்டும் ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈரான் 2015 ஆம் ஆண்டின் அணுசக்தி உடன்படிக்கையை மீண்டும் பின்பற்ற ஆரம்பிப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள அவர், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் விலகிய அந்த உடன்படிக்கையை ஜோ பைடன் நிர்வாகம் மீண்டும் ஏற்றுக்கொள்ளும் எனவும் அவ்ரில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.