(Photo: WHO/Twitter)
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ள அதேவேளை உலகில் பொருளாதார வல்லமையுடையவர்களுக்கும் வல்லமையற்றவர்களுக்கும் இடையில் பெரும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அட்னஹோம் கெப்ரயேசஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிறைவேற்று சபையின் கூட்டத்தில் உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
50 செல்வந்த நாடுகளில் 39 மில்லியன் டோஸ் மருந்துகள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை குறைந்த வருமானமுள்ள நாடுகளில் 25 டோஸ் மருந்துகளே வழங்கப்பட்டுள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஒவ்வொரு நாட்டிற்கும் கொரோனா தடுப்பு மருந்துகளை சம அளவில் பகிர்ந்து அளிப்பதில் தார்மீக தோல்வியை சந்தித்து வருகிறோம் எனவும் இந்த நிலை மாற வேண்டும் என்றும் தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு டெட்ரோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகின் வறிய நாடுகளில் ஏற்படப்போகும் உயிரிழப்புகளும் வாழ்வாதார இழப்புகளுமே இதற்காக நாங்கள் செலுத்தப்போகின்ற விலையாக அமையப்போகின்றது எனவும் சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதேவேளை மருந்துகளை தயாரிப்பவர்கள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியை பெறுவதற்கு பதிலாக மேற்குலகின் அனுமதிகளை பெற்று உயர் இலாபம் பெறுவதற்காகவே இதனை செய்கின்றனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி என்பது உலகப் பொதுப் பொருளாகக் கருதப்பட வேண்டும். அதனை எந்த நாடும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளதுடன் உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும், குறிப்பாக பின் தங்கிய நாடுகளுக்கு தடுப்பு மருந்துகள் கொண்டுசேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் வலியுறுத்தியுள்ளார்.