July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாம் ஒரு தீவிர இனவெறி கொண்ட நாடு’: அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் காவன்

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஒவ்வொரு கிரிக்கெட் அல்லது கால்பந்தாட்டப் போட்டியிலும் இனவெறி வெளிப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எட் காவன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது அவுஸ்திரேலிய பார்வையாளர்கள் இனவெறி வாசகங்களைக் கொண்டு தூற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது, இந்தியாவின் மொஹம்மட் சிராஜ் மீது இனவெறி வாசகங்களைக் கொண்டு பார்வையாளர்கள் தூற்றியுள்ளனர்.

இதுதொடர்பாக, இந்திய அதிகாரிகள் சர்வதேச கிரிக்கெட் சபையில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளதோடு, விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன.

இந்நிலையில், போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தின் போதும் அவுஸ்திரேலிய பார்வையாளர்கள் இனவெறி வாசகங்களைக் கொண்டு இந்திய வீரர்களைத் தூற்றியுள்ளதோடு, ஆட்டமும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கவலை தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் காவன், அவுஸ்திரேலியாவில் இனவெறிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஒவ்வொரு விளையாட்டிலும் இனவாத, இனவெறி சம்பவங்கள் நடைபெறுவதாகவும், அதுகுறித்து மக்கள் மௌனம் காப்பது புதுமையளிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.