October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னியை விடுவிக்குமாறு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

(Photo:Facebook/ Alexei Navalny)

மாஸ்கோவின் சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சே நவால்னியை விடுவிக்குமாறு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் குறித்தும் அவரது ஆட்சி குறித்தும் கடுமையாக விமர்சித்து வந்தவர் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சே நவால்னி.

இவர் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது மயங்கி விழுந்த நிலையில்  உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் கோமா நிலைக்கு சென்றார்.

இவருக்கு ரஷ்ய ஜனாதிபதி விஷம் கொடுத்ததாக ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் குற்றஞ்சாட்டி வந்தன.

ரஷ்யாவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டால் புட்டினின் அரசால் அவரது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று ஜெர்மனியில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்நிலையில் நேற்றையதினம் ரஷ்யா திரும்புவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அலெக்சே தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஜெர்மனியில் இருந்து நவால்னி மாஸ்கோவின் ஜெரெமெட்வோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார்.

அப்போது இரண்டு நிர்வாகக் குற்றங்களைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.

மேலும் விதிமீறல் குற்றத்திற்காக கைது செய்ய இருப்பதாகவும் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதேவேளை ரஷ்ய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு அரசுக்கு அஞ்சாமல் கருத்துக்களை வெளிப்படுத்துதல் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை பயன்படுத்துவதற்கான தகுதியுடையவர்கள்.

அலெக்ஸி நவால்னி மீது எவ்வித சர்ச்சைகளும் இல்லை. அவரை உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்குமாறு நாங்கள் கோருகிறோம்”  என மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளும், ஐரோப்பிய பேரவையின் தலைவரும் ரஷ்ய எதிர்கட்சி தலைவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், மேற்குலக நாடுகள் தங்கள் உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக எதிர்க்கட்சி தலைவர் அலெக்சே நவல்னி கைதுசெய்யப்பட்டுள்ள விவகாரத்தைப் பயன்படுத்துகின்றன என வெளி விவகார அமைச்சர் சேர்கேய் லவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேவேளை மேற்குலக நாடுகள் சர்வதேச சட்டத்தை மதிக்கவேண்டும் எனவும் இறைமையுள்ள நாடுகளின் தேசிய சட்டங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்துக்கொண்டு தங்கள் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் எனவும் ரஷ்ய வெளி விவகார அமைச்சின் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.