(Photo: Twitter/ @Qta_Balochistan)
ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் அதிகாலை உயர் நீதிமன்ற பெண் நீதிபதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதிகள் இருவரும் நீதிமன்ற வாகனத்தில் தங்கள் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளதாக நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் அஹ்மத் பாஹிம் கவீம் தெரிவித்தார்.
மேலும் ‘துரதிர்ஷ்டவசமாக இன்றைய தாக்குதலில் இரண்டு பெண் நீதிபதிகளை இழந்துவிட்டோம். அவர்களின் வாகன சாரதி காயமடைந்துள்ளார்,’ எனவும் கவீம் கூறினார்.
அந்நாட்டின் உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் 200 க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகளில் அவர்களும் அடங்குவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அண்மைக்காலங்களில் ஆப்கானிஸ்தான் முழுவதும் வன்முறை அதிகரித்துள்ளது, குறிப்பாக காபூலில், உயர்மட்ட நபர்களைக் குறிவைத்து கொலை செய்யும் புதிய போக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் விதைத்துள்ளது.
பல முக்கிய அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட பலர் காபூல் மற்றும் பிற நகரங்களில் அடிக்கடி பகல்நேர தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தலிபான்களைக் குற்றம் சாட்டியுள்ளனர், எனினும் இந்தத்தாக்குதல்களை தலிபான் கிளர்ச்சிக் குழு மறுத்துள்ளது.
இதேவேளை ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புக்களின் அளவை 2,500 ஆகக் குறைத்ததாக அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.