July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“போலிச்செய்திகளால் பிரிட்டன் வாழ் தெற்காசிய சமூகத்தினர் கொரோனா தடுப்பு மருந்துகளை நிராகரிக்கின்றனர்”

கொரோனா வைரஸ் தொடர்பான போலிச்செய்திகள் காரணமாக பிரிட்டனில் உள்ள தெற்காசிய சமூகத்தை சேர்ந்த சிலர் தடுப்பு மருந்துகளை நிராகரிக்ககூடும் என மருத்துவர் ஹர்பிரீட் சூட் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்த போலி பிரசாரங்களை முறியடிப்பதற்கான தேசிய சுகாதார சேவையின் பிரசாரத்திற்கு தலைமை தாங்கும் மருத்துவர் ஹர்பிரீட் சூட் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த போலிச் செய்திகள் பெரும் கரிசனையை ஏற்படுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் இதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போலியான தகவல்கள் பரவுவதில் மொழி மற்றும் கலாசாரம் பங்களிப்பு செய்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தெற்காசிய சமூகத்தைச் சேர்ந்த முன்மாதிரிகள், மதத்தலைவர்கள், சமூக தலைவர்களுடன் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த போலியான தகவல்களை முறியடிப்பதற்காக தேசிய சுகாதார சேவை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் குறித்தே அதிகளவு போலியான செய்திகள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தில் மாமிசம் இல்லை என்பதை தெளிவுபடுத்தவேண்டியுள்ளது.

பன்றிறைச்சி இல்லை என்பதையும் தெளிவுபடுத்தவேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ள ஹர்பிரீட் சூட் இதனை அனைத்து சமூகதலைவர்களும் மதத்தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சமூக ஊடகங்களிலும் வாட்ஸ்அப்பிலும் காணப்படுகின்ற போலியான தகவல்கள் மத அடிப்படையில் இலக்கு வைக்கப்பட்டவை எனவும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளில் மாமிசங்கள், பன்றி இறைச்சி போன்றவை அடங்கியுள்ளன என்ற பிழையான தகவல்கள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.