துருக்கியின் பிரபல எழுத்தாளர் அத்னான் ஒக்தருக்கு இஸ்தான்புல் நீதிமன்றம் 1075 வருட சிறைத்தண்டனை விதித்து, தீர்ப்பளித்துள்ளது.
உலகெங்கிலும் ஹாரூன் யெஹ்யா என அறிமுகமான பிரபல எழுத்தாளர் அத்னான் ஒக்தர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், இஸ்தான்புல் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
சட்ட விரோத அமைப்பொன்றை நிறுவித் தலைமை தாங்கியமை, துருக்கியில் தடை செய்யப்பட்ட பெடோ அமைப்புக்கு உதவியமை, அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக உளவு பார்த்தமை, இள வயதினரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை, சித்திரவதை செய்தமை, கல்வி உரிமைக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் அத்னான் ஒக்தர் மீது முன்வைக்கப்பட்டிருந்தது.
அவர் மீதான விசாரணைகள் 200 க்கு மேற்பட்டோரைத் தடுத்து வைத்து, மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அவர்களில் 100 க்கும் அதிகமானோர் பெண்களாவர்.
விசாரணைகளின் முடிவில் அத்னானுக்கு 1075 வருடங்களும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் அத்னான் ஒக்தார் டார்வினின் கூர்ப்புக் கொள்கையை மறுத்து, ஹாரூன் யெஹ்யா எனும் புனைப் பெயரில் 100 க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். அவரது நூல்கள் மில்லியன் கணக்கில் விற்பனையாகியுள்ளதோடு, 70 க்கு மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.