January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கனடாவிற்கான மருந்து விநியோகத்தினை தற்காலிகமாக நிறுத்தியது பைசர் நிறுவனம்

கனடாவிற்கான கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து விநியோகத்தினை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக பைசர் நிறுவனம் அறிவித்துள்ளமை துரதிஸ்டவசமானது என தெரிவித்துள்ள கனடா அரசாங்கம், இதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை உற்பத்தி செய்வதற்கான நடைமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்வதால் ஜனவரி, பெப்ரவரியில் மருந்து உற்பத்தியை குறைக்கப்போவதாக பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது துரதிஸ்டவசமானது என தெரிவித்துள்ள கனடாவின் கொள்வனவு விவகாரங்களிற்கான அமைச்சர் அனிதா ஆனந், சர்வதேச விநியோகங்கள் அவற்றின் திறனிற்கு அப்பால் செயற்படவேண்டிய நிலையேற்படும்போது இது எதிர்பார்க்கப்படவேண்டிய ஒன்று என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கனடாவில் பாதிக்கப்படும் உயிரிழப்புகள் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாமதத்திற்கு மத்தியிலும் செப்டம்பரிற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படுவதை நோக்கி கனடா சென்றுகொண்டிருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடா கொரோனா வைரசின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதில் கடும் நெருக்கடியை சந்திக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒன்டாரியோவிலும் கியுபெக்கிலும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.