ஐரோப்பிய நாடுகளிற்கான கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து விநியோகத்தினை பைசர் நிறுவனம் தற்காலிகமாக குறைக்கவுள்ளது என தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள நோர்வேயின் சுகாதார அதிகாரிகள், இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகள் பாதிப்பை எதிர்கொள்ளவுள்ளன என தெரிவித்துள்ளனர்.
உற்பத்தியை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே தற்காலிகமாக மருந்து விநியோகம் குறைக்கப்படுகின்றது என நோர்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருடாந்தம் 2பில்லியன் டோஸ் மருந்துகள் என்ற தனது இலக்கினை அடைவதற்கு எவ்வளவு காலம் அவசியம் என்பது தெரியவில்லை என நோர்வேயின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த வாரத்திலிருந்து தனக்கு வழமையை விட குறைவான மருந்துகளே கிடைக்கவுள்ளன என நோர்வே தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை உற்பத்தி செய்வதற்கான நடைமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்வதால் ஜனவரி- பெப்ரவரியில் மருந்து உற்பத்தியை குறைக்கப்போவதாக பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை கனடாவிற்கான கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து விநியோகத்தினை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக பைசர் நிறுவனம் அறிவித்துள்ளமை துரதிஸ்டவசமானது என தெரிவித்துள்ள கனடா அரசாங்கம் இதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.