July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் : 30 ற்கும் அதிகமானோர் பலி

இந்தோனேசியாவின் சுலவேசியில் இன்று இடம்பெற்ற பாரிய நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

மஜேன் என்ற நகரிலும் அதன் அருகில் உள்ள மமுஜூ என்ற பகுதியிலும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த நிலநடுக்கம் 7 விநாடிகளுக்கு நீடித்ததுடன் மருத்துவமனை ஒன்று தரைமட்டமானது. அதில் இருந்த நோயாளிகள், ஊழியர்களில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இதேவேளை நிலநடுக்கத்தில் இது வரையில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தேடுதல் நடவடிக்கையும் மீட்பு பணிகளும் தொடர்ந்து இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலநடுக்கத்தால் மஜேனில் நகரில் 637 பேரும் மமுஜூவில் 25 பேரும் படுகாயமடைந்துள்ளதாகவும் சுமார் 10,000 பேர் தற்காலிக முகாம்களில் உள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி உருவாகாத போதிலும் தொடர்ச்சியான சிறிய அதிர்வுகள் காணப்படுவதாகவும் இந்தோனேசியாவின் காலநிலை அவதான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு  இன்னொரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டால் சுனாமி உருவாகலாம் என அவர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

தற்போது நிலைமை பாதுகாப்பானதாக உள்ளது அதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும், ஆனால் தொடர்ந்தும் சிறிய அதிர்வுகளை உணர்கின்றோம் என பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.