July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரண்டாவது முறையாக பதவிநீக்க விசாரணைக்கு உள்ளாகும் ஒரே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு தடவைகள் பதவிநீக்க குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியாக டொனால்ட்  ட்ரம்ப் வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களைத் தூண்டிய குற்றச்சாட்டில் காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையில் அவர் மீது குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் காங்கிரஸின் மேலவையான செனட் சபை அடுத்து வரும் நாட்களில் விசாரணை நடத்தவுள்ளது.

அந்த விசாரணையில் டொனால்ட் ட்ரம்ப் குற்றவாளியாக காணப்பட்டால், செனட் சபையில் அந்தத் தீர்ப்பு மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.

செனட் சபையின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அந்தத் தீர்ப்புக்கு கிடைத்தால் டொனாலட் ட்ரம்ப் பதவியிலிருந்து அகற்றப்படுவார்.

செனட் சபையில் மூன்றில் இரண்டு ஆதரவு கிடைக்காத பட்சத்தில் வரும் ஜனவரி 20 ஆம் திகதி வரை ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியில் இருப்பார்.

எது எப்படி அமைந்தாலும், அமெரிக்க அரசியலமைப்பின் படி, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்பார்.

அதற்கு முன்னதாக, டொனால்ட் ட்ரம்ப் புரிந்துள்ளதாகக் கூறப்படும் குற்றங்களுக்காக அவரை குற்றவாளியாக தீர்ப்பளிக்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் முனைப்புடன் உள்ளனர்.

அதற்கு டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் ஆதரவும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜோ பைடனைக்கு எதிராக யுக்ரேனைத் தூண்டியதன் மூலம் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு 2019 செப்டெம்பரில் முதலாவது குற்றப் பிரேரணை காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், செனட் சபையில் போதிய ஆதரவு இல்லாமையால் அந்தக் குற்றச்சாட்டு மூலம் டொனால்ட் ட்ரம்பை அப்போது பதவிநீக்க முடியவில்லை.