October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தாலும் பெருமளவு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப்போவதில்லை’

உலகின் பல நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை பயன்படுத்த ஆரம்பித்தாலும் இந்த வருடம் பெருமளவு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப்போவதில்லை என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்திலும் நாடுகளும் மக்களும் சமூக விலகல் நடவடிக்கைகளையும் நோயை கட்டுப்படுத்துவதற்கான ஏனைய நடவடிக்கைகளையும் கடைப்பிடிப்பது முக்கியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பை வழங்கினாலும் 2021ற்கு மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெறும் நிலையை நாங்கள் அடையப்போவதில்லை.

சிலநாடுகள் சில பகுதிகளில் இது இடம்பெற்றாலும் முழு உலகையும் உங்களால் பாதுகாக்க முடியாது.சனத்தொகை முழுவதையும் பாதுகாப்பதற்கு 70 வீதமானவர்களிற்கு கொரோனா தடுப்பு மருந்தினை வழங்கவேண்டும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

எனினும் கொரோனா வைரசின் அதிகளவு தொற்றுத்தன்மை காரணமாக 70 வீதத்திற்கும் அதிகமானவர்களிற்கு தடுப்பு மருந்தினை வழங்கவேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,உலகின் மிகவும் வறிய நாடுகளில் மருந்துகளை வழங்கும் நடவடிக்கை இந்த மாதமோ அல்லத அடுத்த மாதமோ ஆரம்பமாகும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசகர் புரூஷ் அயில்வோர்ட் அனைத்து நாடுகளுக்கும் கொரோனா மருந்து கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

எங்களால் மாத்திரம் அதனை செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ள அவர், ஆபத்தான நிலையிலுள்ள மக்களிற்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்குவதற்கு மருந்து உற்பத்தியாளர்களின் ஆதரவு உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.