July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க மத்திய அரசின் மரண தண்டனை பட்டியலில் இருந்த ஒரேயொரு பெண் கைதிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது!

அமெரிக்க மத்திய அரசின் மரண தண்டனை பட்டியலில் இருந்த ஒரேயொரு பெண் கைதிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

லிசா மொன்ட்கொமேரி என்ற பெண்ணுக்கே அதிகாரிகள் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

லிசா மொன்ட்கொமேரி, 2014 இல் கர்ப்பிணிப் பெண்ணொருவரை கொலை செய்த பின்னர் அவரது வயிற்றை வெட்டி குழந்தையை எடுத்துச் சென்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.

இந்நிலையில் இந்தியானாவில் உள்ள சிறையொன்றில் விச ஊசி ஏற்றி லிசா மொன்ட்கொமேரிக்கு அதிகாரிகள் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

அமெரிக்காவில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான தடையை நீதிமன்றம் நீக்கியதை அடுத்துக் குறித்த பெண்ணிற்கு இம்மாதம் 12 ஆம் திகதி தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பெண் சித்தசுவாதீனமற்றவர், சிறுவயதில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர் எனவும் அவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றும்படியும் அவரது சட்டத்தரணிகள் வாதிட்டு வந்ததன் காரணமாக இந்த விவகாரம் உலகத்தவரின் கவனத்தை ஈர்த்திருந்தது.

மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அவரிடம் இறுதி ஆசைகுறித்து கேள்வி எழுப்பியவேளை, அவர் எதுவுமில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த மரண தண்டனையை நிறைவேற்றிய அனைவரும் அதற்காக வெட்கப்படவேண்டும் குறித்த பெண்ணின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சில மாநிலங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பெண்கள் பலரும் தண்டனை வரிசையில் இருந்தாலும், மத்திய அரசின் பட்டியலில் இவர் மட்டும் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.