November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வாட்ஸ்அப் மீதான அதிருப்தி; ‘72 மணிநேரத்தினுள் 25 மில்லியன் பயனாளிகள் டெலிகிராமுடன் இணைந்தனர்’

வாட்ஸ்அப் நிறுவனத்தின் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் குறித்த புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, கடந்த 72 மணித்தியாலங்களில் 25 மில்லியன் பயனாளர்கள் டெலிகிராம் செயலியில் இணைந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது டெலிகிராம் செயலி 500 மில்லியன் பயனாளர்களைக் கடந்துள்ளதாக அந்நிறுவனம் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய பயனாளிகளில் 38 வீதமானோர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், 27 வீதமானோர் ஐரோப்பாவையும், 21 வீதமானோர் லத்தின் அமெரிக்காவையும், 8 வீதமானோர் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாளொன்றுக்கு சுமார் 1.5 மில்லியன் புதிய பயனாளர்கள் டெலிகிராம் செயலியுடன் இணைந்துகொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களைப் பேணுவது தொடர்பான வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்தே வாட்ஸ்அப் பாவனையாளர்கள் வேறு தளங்களுக்கு மாற முயற்சித்து வருகின்றனர்.

டெஸ்லா தலைமை அதிகாரியான எலோன் மஸ்க் சிக்னல் செயலியை பயன்படுத்த பரிந்துரைத்துள்ளதைத் தொடர்ந்து, பெரும்பாலானோர் தற்போது டெலிகிராம் போன்று சிக்னல் செயலியையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.