
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனக்கு எதிரான ஜனநாயக கட்சியினர் முன்னெடுத்துள்ள அரசியல் குற்றப்பிரேரணை தீர்மானத்தை வரலாற்றின் மிகப்பெரிய அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் தொடர்ச்சி என வர்ணித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாங்கள் வன்முறையை விரும்பவில்லை. எனினும் இது கடும் சீற்றத்தை ஏற்படுத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வன்முறையைத் தூண்டினார் என குற்றம்சாட்டி அவருக்கு எதிரான அரசியல் பிரேரணையை ஜனநாயக கட்சியினர் காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையில் முன்வைத்துள்ள நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தானே வெற்றிபெற்றதாக டிரம்ப் பிழையாக உரிமைகோரியதையும், ஜனவரி ஆறாம் திகதி அவர் ஆற்றிய உரையையும் அதன் பின்னர் நாடாளுமன்றத்திற்குள் இடம்பெற்ற வன்முறைகளையும் குறித்த பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.