
வொஷிங்டன் உட்பட அமெரிக்காவின் பல நகரங்களில் எதிர்வரும் வாரங்களில் வன்முறைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத்துறை (FBI) எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன்பாக ஆயுதங்கள் ஏந்தியவர்கள் ஆர்ப்பாட்டங்கள் அல்லது வன்முறைகளில் ஈடுபடலாம் என மத்திய புலனாய்வுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்கூட்டியே பதவி விலக்கப்பட்டால் நீதிமன்றங்களை தாக்குமாறு அவரது ஆதரவு குழுவொன்று வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அமெரிக்காவின் ஐம்பது முக்கிய நகரங்களிலும் ஆயுதங்களுடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ட்ரம்பின் ஆதரவாளர்களும் வலதுசாரிக்குழுக்களை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் எனவும் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 20 திகதி வரையான காலப்பகுதிக்குள் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அண்மையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் எந்தவித தடையுமின்றி பதவியேற்க வழிவகை செய்யும் வகையில், அவரது வெற்றியை ஆதரித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள், வன்முறையில் ஈடுபட்டதுடன் இதில் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஜோ பைடன் பதவியேற்பு விழாவின்போது மீண்டும் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதால், தலைநகர் வொஷிங்டனில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.