November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் கியூபாவை சேர்க்க டிரம்ப் நிர்வாகம் முடிவு!

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் கியூபாவை சேர்க்கப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பதவிக்காலம் முடிவடைதற்கு ஒன்பது நாட்களே இருக்கும் நிலையில் அந்நாட்டு இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இதனை அறிவித்துள்ளார்.

தலைமறைவாகியுள்ள அமெரிக்க குற்றவாளிகள் மற்றும் கொலம்பிய கிளர்ச்சியாளர்களிற்கு அடைக்கலமளித்ததன் மூலம் சர்வதேச பயங்கரவாதத்திற்குக் கியூபா தொடர்ந்தும் ஆதரவளிப்பதன் காரணமாக இவ் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

கியூபா, வெனிசுலா ஜனாதிபதி நிக்லஸ் மதுரேவிற்கு ஆதரவளித்ததன் காரணமாக அவரால் அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்க முடிகின்றது என கூறியுள்ள மைக் பொம்பியோ இதன் மூலம் வெனிசுலாவிலும் சர்வதேச பயங்கரவாதிகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை மூலம் மீண்டும் கியூபா அரசாங்கத்தை பொறுப்புக் கூறச் செய்யவுள்ளதாகவும் மைக் பொம்பியோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் கஸ்டிரோ அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதையும் அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளையும் நிறுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

2015 இல் கியூபாவைப் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து ஒபாமா நீக்கியிருந்தார்.

இந்நிலையில், டிரம்பின் இந்த நடவடிக்கை கியூபாவுடனான உறவை ஒபாமா காலத்திற்குக் கொண்டு செல்வதற்கான பைடனின் முயற்சிகளுக்கு தடையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.