அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்குமாறு துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் அமைச்சரவையை கோரும் தீர்மானம் காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப்பின் பதவிக்காலம் முடிய இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையிலேயே, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை ஜனநாயக கட்சியினர் கொண்டுவந்துள்ளனர்.
இந்த நடவடிக்கை தோல்வியடையுமானால் அவருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவந்து மீண்டும் பதவிநீக்கத் தீர்மானத்தை கொண்டுவரவுள்ளதாகவும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற வன்முறைகளை டிரம்பே தூண்டினார் என குற்றம்சாட்டியே இந்த குற்றப்பிரேரணையை அவர்கள் முன்வைக்க உள்ளனர்.
ஜனநாயக கட்சியினர் சமர்ப்பிக்கவுள்ள இப் பிரேரணையில், ஜனாதிபதி தேர்தலில் தானே வெற்றிபெற்றதாக டிரம்ப் பிழையாக உரிமை கோரியமையும், ஜனவரி ஆறாம் திகதி அவர் ஆற்றிய உரையும் அதன் பின்னர் நாடாளுமன்றத்திற்குள் வன்முறைகள் இடம்பெற்றமையும் சுட்டிக்காட்டப்படவுள்ளது.
இந்த நடவடிக்கைகள் மூலம் ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்காவின் பாதுகாப்பிற்கும் அதன் அரச ஸ்தாபனங்களிற்கும் கடும் ஆபத்தை ஏற்படுத்தினார் என இந்த அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை தெரிவிக்கின்றது.
அத்துடன் அவர் ஜனநாயக முறைமையின் நேர்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதுடன், அரசியல் அதிகாரத்தை அமைதியாக கையளிக்காது ஜனாதிபதி என்ற வகையில் அவர் மீது வைக்கப்பட்ட நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தினார் எனவும் வன்முறைக்கு காரணமானார் எனவும் பிரேரணை தெரிவிக்கின்றது.
அரசியல் குற்றப்பிரேரணை மீது வாக்கெடுப்பை இந்த வாரமே ஜனநாயக கட்சியினர் நடத்த தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களையடுத்து ட்ரம்பை பதவி விலக்காவிட்டால் அவருக்கு எதிரான அரசியல் குற்றவியல் பிரேரணை நடவடிக்கைகளை துணை ஜனாதிபதி பென்ஸ் முன்னெடுக்கவுள்ளதாக காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி டிரம்பினால் நாட்டிற்கு உடனடி ஆபத்துள்ளது எனவும் குறித்த கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.