
காணாமல்போன இந்தோனேசிய சிறிவிஜய போயிங் 737 விமானத்தின் கறுப்பு பெட்டிகள் இருக்கும் இடம் கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜகார்த்தாவின் தீவுப்பகுதியில் உள்ள கடற்பரப்பில் 75 அடி ஆழத்தில் இரண்டு கருப்பு பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கூடிய விரைவில் அதனை தரைக்குக் கொண்டுவர முடியும் என இந்தோனேசியாவின் இராணுவ தளபதி ஹடிஜஹ்ஜன்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை உடற்பாகங்களையும் விமானத்தின் சிதைவுகளையும் வேறு சில பொருட்களையும் மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட ஸ்ரீவிஜய விமானம் புறப்பட்டு நான்கு நிமிடங்களில் காணாமல் போயிருந்தது.
விமானம் 3000 மீட்டர் உயரத்தில் பயணிக்கும் போது மேற்கு காளிமாண்டான் மாகாணத்தில் உள்ள பொன்டியானாக் என்ற இடத்துக்குச் செல்லும் வழியிலேயே இந்த போயிங் 737 விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக விமான கண்காணிப்பு வலைத்தளம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், விமானத்தை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை விமானம் காணாமல் போன பகுதியில் வெடிப்புச்சத்தமொன்றை கேட்டதாக ஒருவர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை விமானம் மின்னல் போன்று கடலில் விழுந்து வெடித்தாக சம்பவத்தை நேரில் பார்த்த மீனவர் ஒருவரும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.