அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அணுவாயுத தாக்குதலில் ஈடுபடும் ஆபத்துள்ளதா என ஆராய்வதற்காக அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலொசி அமெரிக்க முப்படைகளின் தலைவர் ஜெனரல் மார்க் மிலேயுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் தனது பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் அணுவாயுத தாக்குதலை மேற்கொள்ள முடியாது என்ற உத்தரவாதத்தினை பெற்றுக்கொள்வதற்காக நான்சி பெலொசி சிரேஸ்ட அதிகாரியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
ஸ்திரமற்ற நிலையில் உள்ள ஜனாதிபதி அணுவாயுத தாக்குதலை மேற்கொள்வதை தவிர்ப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளனவா என தான் ஆராய்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜெனரல் மார்க் மிலேயின் பேச்சாளரும் இதனை உறுதி செய்துள்ளார்.
அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலொசி டிரம்பினை பதவி நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.