அமெரிக்கா, பிரிட்டனின் கொரோனா வைரஸ் தடுப்பு மருத்துகளில் நம்பிக்கையில்லை என ஈரானின் ஆன்மீக தலைவர் அலிகமேனி அறிவித்துள்ளார்.
இதனையடுத்து ஈரானின் செம்பிறை சங்கம் கொரோனா தடுப்பு மருந்துகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை ஈரானின் தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆன்மீக தலைவரின் உரையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த இரண்டு மேற்குலக நாடுகளிலும் கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதன் காரணமாக இந்த தடுப்பு மருந்துகளில் தனக்கு நம்பிக்கையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவில் நாளாந்தம் 4000 பேர் வரை உயிரிழக்கும் நிலையில், உண்மையிலேயே அந்நாடு தடுப்பு மருந்தினை உருவாக்கியிருக்குமானால் அவர்களின் நாட்டில் இவ்வளவு இழப்புகள் குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் பைசர் நிறுவனத்தினால் தடுப்பு மருந்தினை உற்பத்தி செய்ய முடியுமென்றால் அவர்களே அதனை பயன்படுத்தலாமே ஏன் அதனை எங்களிற்கு தரவேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகள் குறித்தும் அதேகருத்தினை வெளியிட்டுள்ள அவர் தாம் அமெரிக்காவையும் பிரிட்டனையும் நம்பவில்லை எனவும் அவர்கள் தங்கள் மருந்துகளை வேறு நாடுகளில் சோதனையிட முயலக்கூடும் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையிலேயே பைசர், பயோன்டெக் நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கையை ஈரானின் செம்பிறை சங்கம் கைவிட்டுள்ளது.
ஈரானில் 1.2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 56 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அ்த்துடன் கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்கு 40 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் தேவை என ஈரானின் சுகாதார அமைச்சு ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.