January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய கொரோனா வைரஸ் : அவுஸ்திரேலியாவில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

அவுஸ்திரேலியாவில், வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொறிசன் அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது, முகக்கவசங்களை கட்டாயமாக்குவது உட்பட பல கட்டுப்பாடுகளை பிரதமர் அறிவித்துள்ளார்.

தேசிய அமைச்சரவையின் கூட்டத்தின் பின்னர் பிரதமர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

வீரியமுள்ள வைரஸினால் உருவாகியுள்ள சமூக பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரிஸ்பேர்ன் மூன்று நாட்களுக்கு முடக்கப்படுகின்றது என குயின்ஸ்லாந்து அறிவித்துள்ள நிலையிலேயே பிரதமர் இந்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

அத்துடன் பெப்ரவரி 15ஆம் திகதி வரை நியுசவுத்வேல்ஸ், குயின்ஸ்லாந்து, மேற்கு அவுஸ்திரேலியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அறைவாசியாகக் குறைக்கப்படும் என பிரதமர் தமது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு புறப்படுவதற்கு முன்னர் பயணிகள் தங்களை கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்தி தாங்கள் பாதிக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் எனப் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகள் விமானங்களில் பயணம் செய்யும் போதும் விமான நிலையங்களிலும் முகக்கவசத்தினை அணிவது கட்டாயமானது என ஸ்கொட் மொறிசன் தமது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

விமானப் பணியாளர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஏழு நாட்களிற்கு ஒருமுறை அல்லது விமானங்கள் தரையிறங்கிய உடனேயே தங்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் பிரதமர் இதன் போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் குறிப்பிட்ட மருத்துவ நிலைமைகளின் கீழ் உள்ளவர்கள் இந்த விதியிலிருந்து விலக்களிக்கப் படுவதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் தமது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அன்மையில் பிரிட்டனில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் மேலும் 40 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.