File Photo:WHO
பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முன்வருமாறு ஐரோப்பிய நாடுகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றானது தற்போது 22 ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியுள்ளதாகவும், இந்த நிலை மிகவும் ஆபத்தானது எனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஐரோப்பிய நாடுகளுக்கான பணிப்பாளர் ஹான்ஸ் ஹென்றி பி. க்ளூக் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஐரோப்பிய நாடுகளில் புதிய கொரோனா வைரஸ் பரவும் வேகமானது எதிர்காலத்தில் பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால் இவ்விடயம் தொடர்பில் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஐரோப்பிய நாடுகள் இணைந்து உரிய பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்தி புதிய கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் புதிய கொரோனா வைரஸிற்கு எதிராக செயற்படுவதற்கான சாத்தியம் குறைவாகவே காணப்படுவதாகவும் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.