January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ட்ரம்பை  உடனடியாக பதவி நீக்க ஜனநாயகக் கட்சி வலியுறுத்தல்

அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்து டொனால்ட் ட்ரம்பை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 25 ஆவது திருத்தத்தை பயன்படுத்தி ட்ரம்பை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என துணை ஜனாதிபதி மைக் பென்சிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ட்ரம்பின் தூண்டுதலால் அமெரிக்க காங்கிரஸிற்குள் நுழைந்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்தே ஜனநாயகக் கட்சியினர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

அதேபோன்று அமெரிக்க செனட் சபையின் சிறுபான்மை தலைவரான சக்சூமர், அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோரும் இதே வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

மேலும் ஜனாதிபதியின் ஆபத்தான தேசத்துரோக நடவடிக்கைகள் காரணமாக அவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்கவேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

துணை ஜனாதிபதி எங்கள் வேண்டுகோளை சாதகமாக பரிசீலிப்பார் என்றும் அரசியலமைப்பிற்கும் அமெரிக்க மக்களுக்குமான  சத்தியப்பிரமாணத்துக்கு மதிப்பளிப்பார் என்றும்  கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அமெரிக்க அரசியலமைப்பின் 25 ஆவது திருத்தத்தின் படி துணை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளித்தால் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.