
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் டுவிட்டர் கணக்கை பயன்படுத்த டுவிட்டர் நிறுவனம் எச்சரிக்கையுடன் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.
ட்ரம்பின் “@realDonaldTrump” டுவிட்டர் பக்கத்தை விதிகளை மீறியதற்காக டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியது.
இந்நிலையில், 12 மணித்தியாலங்களுக்கு பிறகு மீண்டும் டுவிட்டர் கணக்கை பயன்படுத்த ட்ரம்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ தனிப்பட்ட டுவிட்டர் பக்கத்திலிருந்து குறிப்பாகத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகப் பேசிய காணொளியையும் மேலும் சில பதிவுகளையும் வெளியிட்டிருந்தார்.
இந்த பதிவுகள் வன்முறையைத் தூண்டும் வகையிலிருந்ததால் அவற்றை டுவிட்டர் நிறுவனம் உடனடியாக நீக்கியது.
மேலும் தொடர்ந்து ட்டிரம்ப் வன்முறையை தூண்டும் மற்றும் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால் அவரின் @realDonaldTrump பக்கம் நிரந்தரமாக நீக்கப்படும் என டுவிட்டர் நிறுவனம் இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதே போன்று பேஸ்புக் நிறுவனமும் ட்ரம்பின் பேஸ்புக் பக்கத்திற்கு எதிராக இரு கொள்கை மீறல்களை ஆய்வு செய்துள்ளது.
இந்நிலையில் அவரின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளும் காலவரையின்றி முடக்கப்பட்டுள்ளன.
மேலும் அமெரிக்காவில் சுமுகமான சூழ்நிலை உருவாகும் வரை அடுத்த இரண்டு வாரங்களுக்காவது தடை நீடிக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.