அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்கு முடக்கப்பட்டுள்ள அதேவேளை, இந்தத் தடை நிரந்தரமாக நீடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வரும் 20 ஆம் திகதி நடக்கவுள்ள ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வு தொடர்பில் பேஸ்புக்கிலோ, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டகிராம் தளத்திலோ டொனால்ட் ட்ரம்பால் பதிவு எதனையும் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
முன்னதாக, அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தின் மீது ட்ரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து சமூக வலைத்தளமான பேஸ்புக், அவரது கணக்கை 24 மணிநேரத்திற்கு முடக்கி வைத்திருந்தது.
ட்ரம்பை பேஸ்புக்கில் எழுத அனுமதிப்பதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் “மிகவும் அதிகமானவை” என்று பேஸ்புக் நிறுவன உரிமையாளர் மார்க் சக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.
நேற்று பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியுப் தளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்த டொனால்ட் ட்ரம்ப், நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை அங்கீகரிக்கும் விதத்தில் (Ilove you” ) கருத்து வெளியிட்டிருந்தார்.
தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டையும் அவர் மீண்டும் முன்வைத்திருந்தார்.
இதனையடுத்து, அந்த காணொளியை சம்பந்தப்பட்ட சமூகவலைத்தளங்கள் நீக்கியிருந்தன.
“மேலும் வன்முறையைத் தூண்டுவதே அவர்களின் எண்ணம்” என்று பேஸ்புக் நிறுவனர் சக்கர்பேர்க் கூறியுள்ளார்.